தமிழ்நாடு

ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடை விதிக்க முடியாது… உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்…

ஒன்றிய அரசு என கூறுவதை தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முதலமைச்சரும், அமைச்சர்களும் இவ்வாறுதான் பேச வேண்டும் என்பதை நீதிமன்ற்ம உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், ஒன்றிய அரசு சொல்லாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் உட்பட ஒன்றிய அரசு என்றே அழைக்கிறார்கள். ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அழைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த ராமசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் திமுக அரசு, இந்திய அரசை ஒன்றியம் என்ற பெயரால் அழைத்து வருகிறது என்றும், திமுக கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இந்த சொல்லாடல் இருப்பதாக மனுவில் கூறியிருந்தார்.

மேலும், இது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றும் ஜம்மு – காஷ்மீர்போல பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். தமிழக தலைமை செயலர் அலுவல் ரீதியான அறிவிப்பு முறைகள் போன்றவற்றில் ஒன்றியம் என்ற வார்த்தை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் அறிவிப்புகள், உரைகள் போன்றவற்றில் இந்திய இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் அழைக்க அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ராமசாமி மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான வழக்கு விசாரணை, நீதிபதிகள், டி.எஸ். சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது மனுதாரர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்ற இரண்டு வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளன. அவ்வாறு இருக்கையில் அதில் அல்லாத ஒன்றிய அரசு என கூறுவது தவறானது என தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி, எடுத்துக்கொள்வதையே கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும் என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு மனுதாரர், சட்டமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, முதலமைச்ச்ர ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. அவ்வாறே தொடர்ந்து அழைக்கப்படும் என தெரிவித்தார்.

மனுதாரர் கோரும் வகையில் முதல்வரும் அமைச்சர்களும், இவ்வாறுதான் பேச வேண்டும் என்று நிதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் மனுதாரர், தமிழக மக்களுக்கு எதனை கற்றுக்கொடுக்க விரும்புகிறார் என தெரியவில்லை என்றும் கூறி, மனுதாரர் கூறும் வகையில் உத்தரவிட முடியாது என குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.