பேருந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்… எதற்கு தெரியுமா?
10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதிக்கு அரசு பேருந்து சேவை தொடங்கியதற்கு, உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி, வேப்பனூத்து கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் பேருந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி, வேப்பனூத்து கிராமங்கள் உள்ளன. இந்த வழிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பயணிகள் வரத்து குறைவால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் பேருந்து சேவையை தமிழக அரசு நிறுத்தியது. ஆனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். தங்கள் கிராமத்திற்கு பேருந்து சேவை வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வந்த நிலையில் தங்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்றனர்.

இந்த நிலையில், மலைப்பட்டி கிராமம் வழியாக இன்று முதல் 3 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மலைப்பட்டி கிராமத்திற்கு வந்த பேருந்துக்கு, அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
பேருந்து மூலம் கிராம புற மக்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று வர உதவியாக இருக்கும் என அப்பகதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில், அரசு பேருந்து சேவையை தொடங்கியதற்கு அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
