கோயில் நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது… அமைச்சர் சேகர் பாபு திட்டவட்டம்…
கோயில் நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என இந்து அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுதிட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை, வடபழனியில் ஆதிமூல பெருமாள் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதிமூல பெருமாள் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. இதன் சொத்துக்கள் மூலம் ஆண்டுக்கு 7.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. ஆளுநர் உரையில் அறிவித்தபடி 100 கோடி ரூபாயை திருக்கோயில் பணிகளுக்கு முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயில்களை புனரமைக்கவும், குடமுழுக்கு விழாவை நடத்தவும், தேர்களை சீரமைக்கவும், தெப்பக்குளங்களை சீரமைக்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படும் என்றார். புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான 500 கோடி ரூபாய்க்கு மேலான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நிலங்கள் மீட்கப்படும் என்றார். அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில் குழுவாக 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகைதாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
கோயில் நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படாது என்றும் கோயில் இடங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவைகளுக்கு மறுபரிசீலனை செய்து வாடகை நிர்ணயிக்கப்படும் என்றார். இந்து சமய அறநிலையத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து அறநிலைத் துறை ஒரு சான்று என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
