பத்துபேர் இல்ல ஓராயிரம் பேரிடம் பேசினாலும் கவலை இல்லை… சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி…
ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியில், யாரோ சிலரிடம் சசிகலா பேசுவதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அரசியலில் இருந்து விலகுவதாக கூறிய சசிகலா, அண்மை காலமாக அதிமுக நிர்வாகிகளோடு தொலைபேசியில் உரையாடி வருகிறார். அது தொடர்பான ஆடியோக்களும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கட்சி வீணாக போவதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்றும் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாவைப்போல் அதிமுகவை வழி நடத்துவேன் என்றும் சசிகலாவின் ஆடியோ வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஒன்றரைகோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியில் யாரோ சிலரிடம் அவர் பேசுவதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக நிர்வாகிகளோடு, சசிகலா தொலைபேசியில் உரையாடுவது தொடர்பாகவும், அது தொடர்பான ஆடியோக்கள் வெளியாவது குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
சசிகலா அதிமுகவில் இல்லை என்றும் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார். அது குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். ஊடகங்கள், பத்திரிகை நண்பர்கள் அதை பெரிதுபடுத்துகிறீர்கள். 10 பேர் அல்ல, ஆயிரம் பேரிடம் பேசினால் கூட எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அந்த அம்மாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
