அரசியல்தமிழ்நாடு

அண்ணா வழியில் திமுக ஆட்சி பீடு நடை போடும்: முதலமைச்சர் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவில்லத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணா தொடர்புடைய புகைப்பட அரங்கையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா வழியில் திமுக ஆட்சி வெற்றி நடை போடும் என்றார். திமுக, 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா இல்லத்திற்கு வந்து வாழ்த்து பெற வேண்டும் என்று கருதி கொண்டிருந்தேன். அதற்கான வாய்ப்பு இன்று கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, கழகத்தை உருவாக்கிய அண்ணா வாழ்ந்த இல்லத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தேன் என்றார்.

மக்களோடு செல். மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ். மக்களோடு சேர்ந்து பணியாற்று என்கிற அறிவுரையை, தம்பிமார்களுக்கு எப்போதும் வழங்கிக் கொண்டிருப்பவர் அண்ணா என்றும், அதை நினைவுபடுத்தி, குறிப்பேடு புத்தகத்தில் எழுதி வைத்து, அவர் தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடு நடை போடும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்வதாக செய்தியாளர்களிடையே முதலமைச்சர் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்று அண்ணா பெயரில் வேறு திட்டங்கள் துவக்கப்பட உள்ளதா என செய்தியாளர் கேள்விக்கு, விரைவில் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறபோது, நீங்கள் எதிர்பார்ப்பது போல் அந்த செய்திகள் வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதன் பிறகு, காஞ்சிபுரத்தில் உள்ள தனியர் கார் தொழிற்சாலையை, முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.