அரசியல்

சசிகலா அதிமுக போர்வையில் சுற்றுப்பயணம் வரக்கூடாது… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ…

அதிமுகவில் சேர்க்க மறுத்த பிறகு, அந்த கட்சிக்கு செல்வேன், கட்சி நடத்துவேன் என்று சசிகலா கூறுவது விளையாட்டுத்தனமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது என்றும், அதிமுக போர்வையில் சசிகலா சுற்றுப்பயணம் வரக் கூடாது என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

அதிமுகவினருடன் சசிகலா உரையாடும் ஆடியோக்கள் அண்மை காலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிகலாவுடன் பேசிய அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த நிலையில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டிஅளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா ஒரு கட்சியை தொடங்கி சுற்றுப்பயணம் வந்தால், அதை யாரும் தடுக்க முடியாது என்றும் அதிமுக என்ற போர்வையில் வரக்கூடாது என கருத்து தெரிவித்தார்.

அதிமுகவில் சசிகலாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அந்த முயற்சியில் சசிகலா ஈடுபடுவது அழகல்ல என்றார். சசிகலா ஒரு கட்சியை தொடங்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அதை யாரும் தடுக்க முடியாது என்றம், அதிமுக போர்வையில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வரக் கூடாது என்றும் அவர் கூறினார்.

சசிகலா அதிமுகவில் சேர்வதற்கு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும் என்றம் அதிமுக பொது செயலாளருக்கு இருந்த அதிகாரம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். கட்சியில் சேர்க்க மறுத்த பின்னர், அந்த கட்சிக்கு செல்வேன், கட்சி நடத்துவேன் என்று சசிகலா சொல்வது விளையாட்டுத்தனமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது என்றார்.

சசிகலா சுற்றுப்பயணம் செய்வதால் அதிமுகவிற்கு எவ்வித பாதிப்பு இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் பதவியில் இருப்பவர்கள் ஆட்சி மாறும்போது கட்சி மாறுவது வழக்கம்தான். அவர்கள் கொள்கையற்றவர்கள். அதிமுக கட்சி வீறு கொண்டு எழுந்து அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலி அதிமுக வெற்றி பெறும். மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.