பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை மீட்க ஆணையம் வேண்டும்..! தமிழக முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களைக் கண்டறிய ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
நம்மை பல ஆண்டு காலம் ஆட்டிப்படைத்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலித் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள்தான் பஞ்சமி நிலங்கள் என அழைக்கப்படுகின்றன . நாடு முழுவதும் இந்த விளைநிலங்களை ஆங்கிலேய அரசு இலவசமாக 1892-ல் தலித் மக்களுக்கு வழங்கியது.
இப்பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட போது சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இதன்படி தலித்துகள் மட்டுமே இந்த நிலத்தை அனுபவிக்க முடியும் வேறு வகுப்பினருக்கு விற்பனை செய்தால் அந்த விற்பனை செல்லாது என்பது சட்டம். ஆனால் காலப்போக்கில் இத்தகைய பஞ்சமி நிலங்கள் சட்டத்துக்கு விரோதமாக பல்வேறு வகுப்பினர் கைகளுக்கு மாறிப் போயின.
இன்றைய நிலையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சமி நிலங்களும் வேறு சமூகத்தினர் வசம் உள்ளது. இத்தகைய பஞ்சமி நிலங்களை கண்டறிந்து மீட்க வேண்டும் என்பது 1990களில் தலித் இயக்கங்கள் முன்வைத்த கோரிக்கை.
1994-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோர் கொல்லப்பட்டதும் வரலாறு. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் பஞ்சமி நிலங்கள் மீட்புக்கான ஒரு ஆணையமும் அமைக்கப்பட்டது.
இன்றளவில் இந்த பஞ்சமி நிலம் திரைப்படங்களிலும் பேசுபொருளாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று மாலை சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள திருமாவளவன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். மாநில SCஆணையம் அமைக்க வேண்டும் பஞ்சமி நிலங்களைக் கண்டறிய ஆணையம் அமைக்க வேண்டுமென விசிக சார்பில் மனுக்கள் அளித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
