கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படாது… தேசிய கொரோனா பணிக்குழு மருத்துவர் விளக்கம்…
கொரோனா தடுப்பு பணியில் மத்திய – மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்திக் கொள்வதே தற்போது தீர்வாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக சில தவறான தகவல்கள் நிலவுகின்றன. இதற்கு மருத்துவர்கள் அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதாக கூறப்படுவதற்கு, தேசிய கொரோனா பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்கு என்.கே. அரோரா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள சைடல் கேடில்லா (Zydus Cadila) என்ற நிறுவனம் தயாரிக்கும் டி.என்.ஏ. அடிப்படையிலான கொரோனா தடுப்பூசியும், பயாலிஜிகள் தடுப்பூசியும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். சீரம் நிறுவனம் தயாரிக்கும் நோவாவேக்ஸ் மற்றும் ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி விரைவில் கிடைக்க உள்ளதாகவும், இதனால் தடுப்பூசி விநியோகம் கணிசமாக அதிகரிக்கும் என்றார்.
ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் ஒரு மாதத்திற்கு 30 முதல் 35 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்றார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஆண்கள் – பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்தாது என கூறினார்.
இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகள், கொரோனா பரவலைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றும் 60 முதல் 70 வரை தடுப்பூசி செலுத்தினால் தொற்று தடுத்து நிறுத்தப்படும் என தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் 20 சதவிகிதத்தினருக்கு லேசான நோய்தொற்று ஏற்படலாம் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை மட்டுமே காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாகவும், மத்திய அரசு இணையதளத்தில் டாக்டர் என்.கே. அரோரா விளக்கமளித்துள்ளார்.
