போலீசார் மீது சாக்கடையை அள்ளி வீசிய போதை ஆசாமி… 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு…
சங்கரன்கோவில் அருகே விசாரணைக்காக சென்ற போலீசார் மீது, போதை ஆசாமி ஒருவன், சாக்கடையை அள்ளி வீசியும் ஆபாச வார்த்தைகளால் பேசிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கல்லத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவர் குடித்துவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளர். அசோகனின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத குடியிருப்புவாசிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, சின்னகோவிளாங்குளம் காவல் நிலயத்தைச் சேர்ந்த காவலர் பாலகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த முயன்றார். அப்போது மது போதையில் இருந்த அசோகன், காவலர் பாலகிருஷ்ணனை ஒருமையிலும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். மேலும், காவலர் பாலகிருஷ்ணன் மீது, சாக்கடையை அள்ளி வீசியுள்ளார். இவற்றை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த காவலர், பின்னர் அங்கிருந்து செல்ல முயன்றார், அவரை பின்தொடர்ந்தபடி வந்த போதை ஆசாமி அசோகன், காவலரின் ஹெல்மெட்டை தரையில் தூக்கிப்போட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டான்.
காவலர் ஒருவரை போதை ஆசாமி ஒருவன் தாறுமாறாக பேசுவது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அசோகனை, போலீசார் தேடி வருகின்றனர்.
