“ஆளுநர் உரை வேதனை அளிக்கிறது”… மு.க.ஸ்டாலினின் புகழ்பாடும் உரை என எல்.முருகன் விமர்சனம்…
நீட் தேர்வு குறித்து பொய்யான வாக்குறுதியை அளித்து, மாணவர்களின் மன உறுதியை குலைக்கும் செயலில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டினார்.
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் உள்ள தனியர் பள்ளியில் முன்களப்பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கலந்து கொணடு, பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையானது பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போற்றுவதற்காகவே ஆளுநரின் உரை இருந்ததாக கூறினார். தேர்தல் வாக்குறுதியாக திமுகவினர் என்னென்ன கொடுத்தார்களோ, அவை எல்லாம் ஆளுநர் உரையில் இடம் பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிப்பதாக கூறினார்.
இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக திமுகவினர் தேர்தல் அறிக்கையில் கூறினார்கள், ஆனால் அது குறித்து ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. அதேபோல் பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு, எரிவாயு சிலிண்டர் மானியம் உள்ளிட்டவைகள் திமுகவினர் வாக்குறுதிகளாக அளித்தார்கள். ஆனால் அது குறித்து ஆளுநர் உரையில் இல்லை என்றார்.

நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்பது திமுகவினருக்கு நன்கு தெரியும் என்றாலும், பொய்யான வாக்குறுதியை கொடுத்து, மாணவர்களின் மன உறுதியை குலைக்கும் செயலை திமுகவினர் செய்து கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ஆளுநர் உரையானது, ஸ்டாலின் புகழ்பாடும் உரையாக இருப்பதுதான் வேதனைக்குரியது. வருத்தத்திற்குரியது என்றார்.
உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதற்கு பாஜக தயாராக உள்ளது. பெட்ரோல் – டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குகீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு கேட்டு வருகிறது. அதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மனித கழிவுகளை இயந்திரங்கள் மூலம் அகற்றும் திட்டம் என்பது மத்திய அரசு கொண்டு வந்தது என்றும் உதயநிதி ஸ்டாலின் புதிதாக கொண்டு வந்தது கிடையாது என்றும் எல்.முருகன் கூறினார்.
