குற்றம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக பிரமுகர்கள்…. 3 பேர் கைது… போலீஸ் விசாரணை…

தஞ்சையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக பிரமுகர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே மேலமணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர், அப்பகுதி திமுக வட்ட பிரதிநிதியாக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் திமுக உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இவர்கள் இருவரும், கணேசன் என்பவருடன் சேர்ந்து அய்யப்பனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளனர். இது தொடர்பாக பேராவூரணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 50 லிட்டர் அளவு கொண்ட பேரலில் 30 லிட்டர் சாராய ஊறலும், 100 லிட்டர் அளவு கொண்ட பானையில் 80 லிட்டர் ஊறலையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் 4 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சிய சம்பவத்தில் தொடர்புடைய திமுக பிரமுகர்கள் அய்யப்பன், செல்வராஜ் மற்றும் கணேஷ் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சிய சம்பவம் தற்போது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.