“அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல்,எதிர்க்கட்சியாக செயல்படும்” – அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர்
அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2 வது நாளான சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது . கூட்டம் தொடங்கியதும் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த நடிகர் விவேக்கிற்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தன் நடிப்பாற்றலால் நகைச்சுவை மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர், அவரின் இழப்பு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், டி.எம்.காளியண்ணன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து எம்எல்ஏ.க்கள் அனைவரும் எழுந்துநின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், கவர்னர் உரை மீதான விவாதத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
கவர்னர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை முக்கியமாக பார்க்கிறேன். அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும். பொதுபோக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
