தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா? ஹேர்கட், பேசியலுக்கு 50% ஆஃபர்…

கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் வருபவர்களுக்கு 50 சதவிகித சலுகை வழங்குவதாக மதுரையில் உள்ள சலூன் கடை உரிமையாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலின் இரண்டாம் கட்ட அலை தற்போது குறைந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசும், தனியார் அமைப்பு சார்பிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அதிரடி சலுகைகளை தனியார் அமைப்புகள் சில அவ்வப்போது வழங்கி பொதுமக்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, எல்லோரா ஃபேமிலி சலூன் கடையில் 50 சதவிகிதம் சலுகை வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழுடன், எல்லோரா சலூன் கடைக்கு வருவர்கள், ஹேர்கட், பேசியல், வாக்சிங் மற்றும் அனைத்து பியூட்டி சர்வீஸ்களுக்கும் 50 சதவிகிதம் சலுகை வழங்கப்படுவதாக கடையின் உரிமையாளர் கூறினார். தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதாலேயே இந்த சலுகையை அறிவித்துள்ளதாக உடை உரிமையாளர் கார்த்திகேயன் கூறினார்.