குற்றம்தமிழ்நாடு

நடிகை பாலியல் புகார்… முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது…

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் அளித்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்ததாகவும், பலமுறை கருவுற்று கருக்கலைப்பு செய்ததாகவும் சென்னை அடையார் காவல் நிலையத்தில் நடிகை சாந்தினி புகார் தெரிவித்திருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், அடித்து காயம் ஏற்படுத்துதல், நம்பிக்கை மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன்ஜாமீன் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான மணிகண்டனை பிடிப்பதற்காக, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.

மணிகண்டன், பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவலின்படி அங்கு சென்ற தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர். அவரை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.