அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு அதிமுகதான் காரணம் என்பதை ஏற்க முடியாது… அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…

நீட் தேர்வுக்கு வித்திட்டுவிட்டு அதற்கு பயிற்சி அளிப்பதை குறை கூறுவது எவ்விதத்தில் நியாயம்? என்று முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருக்கும்போதுதான் என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் என்றும் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளர். அதில், நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருவதைச் சுட்டிக்காட்டினால், நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வு பயிற்சிகள் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது, முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது என விமர்சித்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், நீட் தேர்வு திமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதற்கு இதைவிட ஓர் ஆதாரம் தேவையில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கம் சட்டத்தை நிறைவேற்றி, அதன் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்தியது என்றும் இதன் மூலம் 2019-2020 ஆம் கல்வியாண்டில் 400-க்கும் மேல் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டம் இயற்றாமல் இருந்திருந்தால், அரசு பள்ளியில் பயிலும் 8 மாணவ மாணவிய்ர மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பார்கள் என்றும், ஏழை எளிய மாணவர்களை, கிராமப்புற மாணவர்களைப் பாதுகாத்த அரசு ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்ற அதிமக அரசு என்பதை பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது அதிமுக ஆட்சி காலத்தில்தான் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். நீட் தேர்வுக்கு வித்திட்டு விட்டு, அதற்கு பயிற்சி அளிப்பதை குறை கூறுவது எவ்விதத்தில் நியாயம்? என கேள்வி எபப்பியுள்ளார். மேலும் 2010 ஆம் ஆண்டே திமுக அப்போதைய மத்தயி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றிருந்தால், நீட் தேர்வும் வந்திருக்காது, பயிற்சியும் இருந்திருக்காது என்பதை கோடிட்டு காட்ட விரும்புவதாக ஓ.பி.எஸ். அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது விட்டுவிட்டு, இப்போது அது குறித்து பேசுவது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதற்கு சமம் என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துவதாகவும் அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டள்ளார்.