உலகம்

ஜப்பானில் 187 அடி உயர சிலைக்கு முகக்கவசம்… கொரோனா கட்டுக்குள் வரும் வரை முகக்கவசம் இருக்கும்…

ஜப்பானில் 187 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான பௌத்த பெண் கடவுள் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை முகக்கவசத்தை அகற்றப்போவதில்லை என்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே புரட்டிப்போட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ள நிலையில், தடுப்பு பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஜப்பானில் உள்ள பௌத்த பெண் கடவுளான கண்ணோனின் பிரம்மாண்ட சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டது., 57 மீட்டர் உயரமுள்ள (187 அடி) இந்த சிலைக்கு, இளஞ்சிவப்பு துணியால் செய்யப்பட்ட 5.3 மீட்டர் அளவில் 35 கிலோ எடை கொண்ட முகக்கவசம் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கும் பணியில், 4 தொழிலாளர்கள் 3 மணி நேரத்தில் சிலையின் முகத்தின்கீழ் பாகத்தில் முகக்கவசத்தை அணிவித்தனர்.

இது கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிவுக்கான பிரார்த்தனை என்றும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை முகக்கவசத்தை அகற்றப்போவதில்லை என்றும் பௌத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.