குற்றம்தமிழ்நாடு

யூடியூபர் பப்ஜி மதனின் வங்கி கணக்குகள் ஆய்வு…

பப்ஜி மதன், யூடியூபில் ஆபாசமாக பேசி சம்பாதித்த பல லட்ச பணத்தைக் கொண்டு சொத்துக்கள், கார்கள் வாங்கி குவித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது, மதனின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்பவதாக யூடியூபர் பப்ஜி மதன் மீது குற்றச்சாட்டு எழுந்தது, தன்னுடன் உரையாடும் பெண்களிடம் பப்ஜி மதன் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இது குறித்து, சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்ட சைபர் கிரை போலீசார் விசாரணையைத் துவங்கினர். அதன் பிறகு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பப்ஜி மதனை கைது செய்வதற்காக சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. பப்ஜி மதன் தலைமறைவான நிலையில், சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து மனைவி மற்றும் அவரது தந்தை விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டனர். தற்போது மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார். மதனின் தந்தையிடம் சென்னை மத்திய குற்றவியல் போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதன், யூடியூப் மூலமாக சம்பாதித்த பணத்தை, பங்கு சந்தை, பிட்காயின் என்கிற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மதனின் வங்கிக் கணக்குகள், அவர் முதலீடு செய்தது குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். பப்ஜி மதன், யூடியூப்பில் ஆபாசமாக பேசி சம்பாதித்த பல லட்சங்களைக் கொண்டு சொத்துக்கள், கார்கள் என வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது.

மதனின் வங்கி கணக்குகள், ஆபாச பேச்சுகள் மூலமாக முதலீடு செய்த விவரங்கள் அனைத்தையும் சேகரிக்கும் பணியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். மதனுடன் விளையாடியவர்கள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.