“அதிமுகவுக்குள் குழப்பம் விளைவிக்கும் சசிகலா”… வடசென்னை தெற்கு (கி) மாவட்ட கழக கூட்டத்தில் கண்டன தீர்மானம்…
அதிமுக எழுச்சியோடும் ஒற்றுமையோடும் வளர்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சசிகலா குழப்பம் விளைவிக்கும் நோக்கோடு செயல்படுவதாக வடசென்னை தெற்கு (கி) மாவட்ட அதிமுக கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சார்பாக கழக வளர்ச்சி பணிகள் குறித்து கழக செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் (16.6.2021) நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத சிசிகலா, நேற்று வரை கழகம் அழிந்து விடும் என்று எண்ணித்தான் அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டு தற்போது கழகம் எழுச்சியோடும், வளர்ச்சியோடும், ஒற்றுமையோடும் இருப்பதைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமல், கழகத்திற்கு கலங்கம், குழப்பம் விளைவிக்கும் நோக்கோடு செயல்படும் சசிகலாவிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழகம் வலுவோடும், பொலிவோடும் பீடு நடைபோட்டு தொண்டர்களின் மத்தியில் எவ்வித தொய்வின்றி இழந்த ஆட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க அயராது உழைத்து, எம்ஜிஆர் – ஜெயலலிதாவின் ஆட்சி அமைவது ஒவ்வொரு தொண்டனின் கடமை என பணியாற்றுவோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


