அரசியல்தமிழ்நாடு

அதிமுகவை எந்த அச்சுறுத்தலும் நெருங்க முடியாது… ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அறிக்கை…

திமுக ஆட்சியில் மின்வெட்டு தலைவிரித்தாடுவதாகவும், மக்களை வஞ்சிப்பதில் திமுக ஆட்சி முதலிடம் வகிப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மின்வெட்டு நிகழ்வதாக அதிமுகவினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், ஊதி விளையாடுவதற்கு அதிமுக என்பது புது வெள்ளத்தில் மிதந்து வரும் நுரைபூ அல்ல என்றும் எந்த அச்சுறுத்தலும் எங்கள் இயக்கத்தை நெருங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே திமுகவின் இயற்கை குணாதிசயங்கள், மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்றும், அதிமுகவின் ஐ.டி. பிரிவினர் மீதான தாக்குதலை ஏவி விடுவதில் திமுகவினர் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை திமுகவுக்கு இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டு காலம் தலைக்காட்டாத மின்வெட்டு இப்போது மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது என்றும் ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில் வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் திமுக ஆட்சி முதலிடம் என்றும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.