இந்தியா

கங்கை நதியில் மீட்கப்பட்ட பெண் குழந்தை… வளர்க்கும் பொறுப்பை ஏற்ற உ.பி. முதல்வர்…

கங்கை நதியில் மீட்கப்பட்ட பெண் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை உத்திரபிரதேச அரசு எடுத்துக்கொள்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கங்கை ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்து வந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது. கங்கைக்கரை மணலில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்ரகாண்ட் மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றில் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அந்த பெட்டியில் இருந்து குழந்தை சத்தம் கேட்டதால், அதை திறந்து பார்த்த பொதுமக்கள், 21 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பது தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையுடன் இந்து கடவுளின் புகைப்படங்களும் இருந்தன. பின்னர் அந்த குழந்தையை பொதுமக்கள், காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், குழந்தையை வளர்க்கும் பொறுப்பை உத்தரபிரதேச அரசு எடுத்துக்கொள்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கங்கை நதியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டதால், அந்த குழந்தைக்கு கங்கை என பெயரிடப்பட்டுள்ளது.