பார்வையற்ற தந்தைக்கு உதவுவதாக கூறி சிறுமியை நாசம் செய்த கயவர்கள்… 3 பேர் போக்சோவில் கைது…
பார்வையற்ற தந்தைக்கு உதவி செய்வதாக கூறி, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த உறவினர் உட்பட 3 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், செண்பகனூரைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி ராஷ்மிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் பிரிந்து சென்ற நிலையில், பார்வையற்ற தந்தை, இவரை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவியின் உறவினர் கண்ணன் (42) என்பவர் தந்தைக்கு உதவி செய்வதாக கூறி சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.
இதேபோல், குமார் (56), மணிகண்டன் (22) ஆகியோரும் சிறுமியின் தந்தைக்கு உதவி செய்வதாக கூறி அவரை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர். சிறுமியை ஏமாற்றி சீரழித்து வரும் கயவர்கள் குறித்து அப்பகுதி மக்கள், குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து குழந்தைகள் நல அமைப்பு, கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கண்ணன், மணிகண்டன், குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
