செல்போன் – பணத்துக்காக கொரோனா நோயாளி கொலை… மருத்துவமனை பெண் ஊழியர் கைது…
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த சுமிதா என்பவரை பணம் மற்றும் செல்போனுக்காக கொலை செய்த ஒப்பந்த ஊழியர் ரதிதேவி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மௌலி என்பவர் தனது மனைவி சுமிதாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மே மாதம் 21 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர், மௌலி வீட்டிற்கு சென்று விட்டு 23 ஆம் தேதி அன்று மீண்டும் மனைவி சுமிதாவை பார்ப்பதற்காக மருத்துவமனை வந்துள்ளார். மருத்துவமனையில் சுமிதாவை காணாததை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர், மருத்துவமனை முழுவதும் தேடியுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மௌலி கூறியதை அடுத்து, மருத்துவமனை ஊழியர்களும் சுமிதாவை தேடி வந்தனர்.
சுமிதா திடீரென மாயமானதை அடுத்து, பூக்கடை காவல் நிலையத்தில் மௌலி புகார் அளித்தார். இதனிடையே மௌலிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையின் எட்டாவது மாடியில் உள்ள மின் பகிர்மான அறையில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது., இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். மனைவி காணவில்லை என்று புகார் அளித்த மௌலிக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த மௌலி, மின்பகிர்மான அறையில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் உடல் தனது மனைவியின் உடல் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஒப்பந்த ஊழியராக இருந்த ரதிதேவி என்பவர் பெண் ஒருவரை வீல்சேரில் அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செல்போன், பணம் மற்றும் நகைக்காக சுமிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரதிதேவியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
