அதிமுகவில் புகழேந்தி உள்ளிட்டோரை நீக்கியது அதிர்ச்சியாக உள்ளது: சசிகலா
புகழேந்தி உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், அதிமுகவை விட்டுவிட மாட்டேன் என்றும் சசிகலா பேசியுள்ளார்.
அண்மை காலமாக அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் உரையாடி வருகிறார். கட்சியை மீண்டும் நல்ல வழியில் கொண்டு வருவோம் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என சசிகலா பேசி வருகிறார். இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின்போது சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரையும் கட்சியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும், இனி இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் சசிகலா இல்லை என்றும் அவர் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பார்ப்பதாகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். புகழேந்தி உள்பட 16 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக அதிமுக தலைமை நீக்கியது.
இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த பாரதி என்பவருடன் சசிகலா பேசும் 42-வது ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அப்போது பேசிய அவர், புகழேந்தி உள்ளிட்டவரை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். தொண்டர்கள் தன்னுடன் இருப்பதால் அதிமுகவை சரி செய்து விடலாம் என்றும் என்ன சொன்னாலும் அதிமுகவை விட்டுவிட மாட்டேன் என்றும் அந்த ஆடியோவில் சசிகலா பேசியுள்ளார்.
