பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்… சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்த சிபிசிஐடி…
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. பள்ளியின் நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜராகினர். ஆனால் சிவசங்கர் பாபா உள்பட 3 பேர் ஆஜராகவில்லை.
சிவசங்கர் பாபா, ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், டேராடூன் சென்ற அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜரானார். இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. சிவசங்கர் பாபா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. மேலும், மருத்துவமனையில் உள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரிப்பதற்காக, சிபிசிஐடி குழுவினர் டேராடூன் விரைந்துள்ளனர்.
சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளிக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். வேறு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க துவங்கியுள்ளனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், வேறு பள்ளிக்கு மாறியுள்ளதாக தெரிகிறது. இதேபோல் ஆசிரியர்களும், ராஜினாமா செய்து விட்டு வேறு பள்ளிகளில் வேலைக்காக முயற்சித்து வருகின்றனர்.
