அரசியல்தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்கு செல்வார்… புகழேந்தி சாபம்…

அதிமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டிருப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆணவப்போக்கு என்றும் அதிமுகவை கைக்குள் கொண்டு வந்து அனைவரையும் அடிமையாக நடத்த எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினர். கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் புகழேந்தி அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த புகழேந்தி, சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அரசியல் எதிரியை இனி சந்திக்க உள்ளதாக சவால் விடுத்தார். எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் பாமக-வின் ஆதரவை எதிர்பார்த்து என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். சசிகலா ஆதரவில் இருந்து விலகிய பின் அவருடன் போனில் கூட பேசியதில்லை. அ.தி.மு.க-வை அசிங்கப்படுத்தியவருக்கு கண்டனம் கூறியது தவறா? என்று புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

இடி அமீனின் குணங்களை பழைய நண்பர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் பார்ப்பதாக கூறினார். அதிமுகவை கைக்குள் கொண்டு வந்து, அனைவரையும் அடிமையாக நடத்த வேண்டும் என்று நினைப்பதாகவும், இடி அமீனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று புகழேந்தி கூறினார்.