திமுக பிரமுகர்கள் வீடு புகுந்து தாக்குதல்… துணை நடிகை போலீசில் புகார்…
துணை நடிகை மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை, ராதா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா பாண்டிலட்சுமி. இவர் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஒரு குப்பை கதை என்ற படத்தில் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரது வீட்டின் எதிர் வீட்டின் சுற்றுச்சுவர் மீது சிலர் ஏறியுள்ளனர். இது குறித்து அவர்களிடம் பாண்டிலட்சுமி கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் மாறி மாறி தாக்கி கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில், திமுக பிரமுகர்களின் ஆதரவாளர்கள் வீடு புகுந்து தன்னையும் தனது மகனையும் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்ததாக பாண்டிலட்சுமி, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாண்டி லட்சுமியின் புகாரை அடுத்து இரண்டு தரப்பினரிடையேயும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாண்டி லட்சுமி மற்றும் திமுக ஆதரவு பிரமுகர்கள் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
