அரசியல்தமிழ்நாடு

பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் திறப்பு ஏன்? எல்.முருகனுக்கு அமைச்சர் கே.என்.நேரு கேள்வி…

பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறந்துவிட்டு தமிழகத்தில் டாஸ்மாக்கை திறப்பதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய எல்.முருகன், எதிர்கட்சியாக இருந்தபோது ஒருநிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒருநிலைப்பாடு என ஸ்டாலின் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் விமர்சித்தார்.

எல். முருகனின் இந்த பேச்சுக்கு, அமைச்சர் கே.என்.நேரு, கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் அமைச்சர் நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறந்து விட்டு தமிழகத்தில் டாஸ்மாக்கை திறப்பதற்கு பாஜகவினர் எதிர்ப்பதாக கூறினார். அவர்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் தவறா? என்றும் மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடமா? என்றும் விமர்சித்தார். ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது போலவே டாஸ்மாக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நேரு கூறினார்.