தமிழ்நாடு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல்… சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்…

பாலியல் புகார்களைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவசங்கர் பாபா வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கு தொடர்பாக சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர்பாபா மீது 3 தனித்தனி புகார்கள் கொடுக்கப்பட்டு, அதன் மீது தனித்தனியாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள இயங்கி வரும் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவன தலைவராக சிவசங்கர் பாபா உள்ளார். இவர் ப்ரைமரி பள்ளிகளில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், சமூக வலைத்தளங்களில் சிவசங்கர்பாபாவின் பாலியல் அத்துமீறல்களை பதிவிட்டு வந்தனர்.

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சிவசங்கர்பாபா, பள்ளி நிர்வாகிகள் 6 பேர் நேரில் ஆஜராகும்படி ஆணையம் சார்பாக சம்மன் அனுப்பப்பட்டது. சிவசங்கர்பாபா, ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் முன்னாள் மாணவிகள் 3 பேர் தனித்தனியாக அளித்த புகாரைத் தொடர்ந்து சிவசங்கர்பாபா மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் இதற்கான விசாரணையை தொடங்க உள்ளனர்.