சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களுக்கு விலக்கு… முதல்வர் அறிவுறுத்தலின்படி டிஜிபி உத்தரவு…
சாலைகளில் பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் ஈடுபட வேண்டாம் என தமிழக டிஜிபி திரிபாதி விலக்களித்துள்ளார். முதலமைச்சரின் சாலை பயணத்தின்போது பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தமிழக டிஜிபி திரிபாதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் பயணம் வெளியில் செல்வதாக இருந்தாலும், தலைமை செயலகத்துக்கு செல்வதாக இருந்தாலும், சாலையின் இருபுறங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் பெண் காவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற பணிகளில், நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில், பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன் அடிப்படையில் தமிழக டிஜிபி திரிபாதி, சாலைகளில் பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் ஈடுபட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். சென்னை மட்டுமல்லாது, பிற மாவட்டங்களுக்கு முதலமைச்சர் செல்லும்போது, சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் காவல் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
