வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்கு வந்தது கொரோனா அல்ல… புதிய வகை உயிர்கொல்லி நோய்… அதிர்ச்சி தகவல்…
சென்னை அருகே வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு வந்தது கொரோனா தொற்று அல்ல என்றும், கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் எனும் புதிய உயிர்க்கொல்லி நோய் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த நீலா என்ற பெண் சிங்கத்துக்கு உடல்நலம் இல்லாமல் போய்விட்டது அதைத் தொடர்ந்து அதன் சளி மாதிரிகளை சேகரித்து மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீலாவுக்கு கொரோனா வந்துள்ளதாக தகவல் வந்தது. அடுத்த சில நாட்களில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.
தொடர்ந்து உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கும் அடுத்தடுத்து உடல்நலம் இல்லாமல் போய்விட்டது. 9 சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலுக்கு அனுப்பி வைக்ப்பட்டன. அவைகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், சிங்கங்களுக்கு வந்திருப்பது கொரோனா வைரஸ் தொற்று அல்ல என்றும் புதிய சிடிவி என்ற வைரசினால் ஏற்பட்ட தொற்றும் என்றும் கண்டறிந்தனர்.
சிடிவி என்று சுருக்கமாக அழைக்கப்படும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ், நாய்கள் மூலமாக சிங்கங்களுக்குப் பரவி இருக்கக் கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மேலும், கீரிப்பிள்ளை, எலி வகைகள், நாய்கள் ஆகியவற்றில் பரவும் இந்த சிடிவி வைரஸ், சிங்கங்களுக்கும் பரவி இருக்கக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிடிவி என்ற புதிய உயிர்க்கொல்லி நோய், மிகவும் அபாயகரமானது என்றும் இது இளம் வயதுள்ள மிருகங்களை மட்டுமே குறைவைத்து தாக்குவதாகவும், வயதான மிருகங்களை இந்த வைரஸ் பாதிப்பதில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு வைட்டமின் மாத்திரை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
