“பெண்களும் அர்ச்சகராகலாம்… பயிற்சியும் அளிக்கப்படும்”: அமைச்சர் சேகர்பாபு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும், பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும், தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றார். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்றும், அர்ச்சனை செய்பவர்களின் பெயர், செல்போன் எண்களும் அறிவிப்பு பலகையில் இடம் பெறும் என்றார்.
அர்ச்சகர் பற்றாக்குறை உள்ள கோயில்களில் தேவையான அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார் என்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றார். கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள 30 கோயில் யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். மதம் சார்ந்த விஷயங்களில் யாருடைய மனமும் புண்படக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், திருச்சி ஜீயர் நியமனத்திலும் தொடர்ந்து எந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததோ அதே நடை முறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
