உலகம்

தடுப்பூசி போடலையா? அப்ப உங்க மொபைல்போன் எண் முடக்கம்தான்… அரசின் அறிவிப்பால் கலக்கத்தில் பொதுமக்கள்…

கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் மொபைல் போன் எண்கள் முடக்கப்படும் என்று பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநில சுகாதார துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று, உலகையே முடக்கிப்போட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி ஒன்றே தற்போது தீர்வாக உள்ளது. முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை பின்பற்றினால் கொரோனா தொற்று குறையும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது.

உலக நாடுகள், தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல், தடுப்பூசி போடுவதை தள்ளிப்போட்டுக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாவட்டத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் பலர் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம், முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுமார் 3 லட்சம் பேர் முதல் டோஸை போட்டுக்கொண்டவர்கள், இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பஞ்சாப் மாவட்ட சுகாதார துறை, அதிரடியான முடிவை அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் மொபைல் எண்கள் முடக்கப்படும் என்று அறிவித்துள்ளது.