அரசியல்தமிழ்நாடு

“கருப்பு பூஞ்சையால் இறந்தவர்களும் கொரோனாவால் இறந்ததாக சான்று அளியுங்கள்”… முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை..

கொரோனா சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புபவர்கள் கருப்பு பூஞ்சை நோய் பாதித்து உயிரிழப்பவர்களுக்கும், கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக சான்றளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம், கள்ளிக்குடி அருகே வில்லூர் கிராமத்தில் உள்ள சுகாதார மையத்தை, முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்த அனைவருக்கும் தலா நான்கு லட்ச ரூபாய் வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்ற அறிவிப்பு தமிழகத்திலும் அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு உரிய இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்.

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் கொரோனா நிவாரண நிதி இரண்டையும் கேட்டுப் பெறவும் மதுரை மக்கள் சார்பாக வலியுறுத்துவதாக கூறினார். கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொரோனா தொற்றால் இறந்ததாகவே வழங்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்ததாக சான்றளிக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.