அரசியல்தமிழ்நாடு

டாஸ்மாக்-ஐ திறக்க அனுமதித்த “அண்ணனிடம் என்ன, எப்படி கேட்பீர்கள்…!?” கனிமொழிக்கு, வானதி சீனிவாசன் கேள்வி…

கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி, தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்த அவரது சகோதரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அது குறித்து கேள்வி எழுப்புவாரா? என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்பதில் ஆர்வம் காட்டுவது ஏன் என்று தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டதற்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரியும், எம்.பி.யுமான கனிமொழியும், டாஸ்மாக் திறக்க அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “குடியைக் கெடுக்கும் அதிமுக… குடிகெடுக்கும் எடப்பாடி…” என்று கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்க திமுக அரசு அனுமதிக்கப்பட்டது குறித்து, “அண்ணன் ஸ்டாலினிடம் என்ன, எப்படி கேட்பீர்கள்” என்று பாஜக தேசிய மகளிர் ஆணையத் தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.