இறப்பு சான்றை ஆய்வு செய்ய வேண்டும்… தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு…
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறப்பு சான்றிதழில் கொரோனாவால் மரணம் இல்லை என குற்றம் சாட்டி வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கொரோனாவால் மரணம் என்பதற்கு பதில் இணை நோயால் மரணம் என்று இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்படுவதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, கொரோனா தொற்று உறுதி சான்றிதழ் இருந்தால்தான், அவருக்கு கொரோனாவால் மரணம் ஏற்பட்டதாக சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார். மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால்தான், கொரோனா அலை மீண்டும் பரவாமல் தடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதற்கு வாய்ப்பாக அமையும்.
இணைய நோய்களால் மரணம் அடைபவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஜூன் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.
