“உண்மை நிலையை வெளியிடுவதுதான் சரி”… மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு…
கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த தகவல்களை பொதுத்தளத்தில் வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறியதற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதார துறை சார்பில் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில், கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை, மாநில – யூனியன் பிரதேச அரசுகள் பொதுத் தளங்களில் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இன்றி எந்த நிறுவனத்துடனும், ஊடகங்களுடனும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், ஆன்லைனில் வெளியிடக் கூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறியுள்ளதற்கு, தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசி எண்ணிக்கையை பொதுத்தளத்தில் தெரிவிக்கக் கூடாது என்று மத்திய அரசின் சுகாதார துறை கூறியுள்ளது. ஆனால், தடுப்பூசி கையிருப்பு குறித்து தெரிவிக்காமல் இருந்தால், மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியாமல், தடுப்பூசிக்காக வரிசையில் காத்திருந்து ஏமாறும் நிலை ஏற்படும் என்றார். எனவே தடுப்பூசி குறித்த உண்மை நிலையை மக்களுக்கு சொல்வதுதான் சிறந்தது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
