அரசியல்தமிழ்நாடு

ஒருநாள் உணவு செலவு ரூ.350 – ரூ.450 நிர்ணயம்.. நாள் ஒன்றுக்கு ரூ.30 லட்சம் மிச்சம்… அமைச்சர் தகவல்…

கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியருக்கு ஒருநாள் உணவு செலவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் மருத்துவர், செவிலியருக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் உணவு தொகை 550 – 600 ரூபாயில் இருந்து தற்போது 350 – 450 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்களுக்கு தரப்படுகிற உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவைகள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 20 நாட்களாக இது குறித்து நாங்கள் தீவிரமாக பல்வேறு வகைகளில் ஆராய்ந்தோம். அந்த வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி மருத்துவர், எசவிலியருக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் உணவு தொகை 550 – 600 ஆக இருந்தது. இது குறித்து விசாரித்தபோது பல நிறுவனங்கள், ஏதாவது ஒரு ஓட்டலில வாங்கி சப்ளை செய்து, அரசாங்கத்திடம் கூடுதல் பணம் பெற்று வந்தார்கள்.

இந்த நிலையைப் போக்கிட பிரசித்தி பெற்ற ஓட்டல்களான வசந்தபவன், அடையார் ஆனந்தபவன், சரவணபவன், சங்கீதாபவன் போன்ற ஓட்டல்களில் உணவு வாங்கி கொரோனா நோயாளிகளுக்கோ மருத்துவர்கள் – செவிலியர்களுக்கோ தந்தால் மனதளவில் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் எங்கேயோ தயாரிக்குற உணவு தினசரிகளில் சுற்றிக்கொடுக்கிறபோது அது நோயாளிக்கு மகிழ்ச்சியை தராது. இப்போது பல இடங்களில் 550 – 600 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிற உணவு தரமான பிரசித்தி பெற் உணவகங்கள் மூலம் ரூ.350, ரூ.375, ரூ.450 என்கிற அளவில் விலை நிர்ணயம் செய்திருக்கிறோம். ரூ.500 – 600 என்றிருந்த விலையை தற்போது ரூ.350-375-450 ஆக குறைத்துள்ளோம்.

சென்னையைப் பொருத்தவரை 450 ரூபாயாகவும், திருவள்ளூரைப் பொருத்தவரை 375 ரூபாயாகவும் மற்ற ஒரு சில மாவட்டங்களில் 350 என்கிற அளவில் விலை நிர்ணயம் செய்துள்ளோம். பிரசித்திபெற்ற ஓட்டல்களில் இருந்து உணவு வாங்கித் தரும் பணியினை கடந்த 21 ஆம் தேதியில் இருந்து செய்து கொண்டிருக்கிறோம். கடந்த அரசைக் காட்டிலும், முதலாம் அலையில் உணவுக்காக செலவிடப்பட்ட தொகையைக் காட்டிலும், நாள் ஒன்றுக்கு மிச்சப்படுத்தப்பப்பட்டு கொண்டிருக்கிற தொகை 30 லட்சம் ரூபாய். இந்த தொகை முழுவதும் யாரோ இடைத்தரகர்களுக்கு போய் கொண்டிருந்தது.

அதேபோல், மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஓட்டல்களுக்கு இதுவரை ஒருவருக்கு 900 ரூபாய் வழங்கப்பட்டது. அதே ஓட்டல்களில் இப்போது இடைத்தரகர்கள் இல்லாமல், 750 ரூபாயாக குறைத்துள்ளோம். இதன் மூலம் நபர் ஒருவருக்கு 150 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி குறைக்கப்பட்டுள்ள தொகையும் உணவில் மிச்சப்படுத்தப்பட்டுள்ள தொகையும், ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் அளவுக்கு மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த தொகை மாதத்துக்கு 9 – 10 கோடி ரூபாய் என்கிற அளவில் மிச்சப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்