“கொலை மிரட்டல்…!” சசிகலா மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்…
தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீதும், அதற்கு தூண்டுதலாக இருக்கும் சசிகலா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அண்மையில் பேட்டி அளித்திருந்தார். அதிமுக சரித்திரத்துக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை என்றும் அவர் என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது என்றார். மேலும் கருவாடுகூட மீனாகிவிடலாம் ஆனால், அதிமுகவில் சசிகலா ஒரு நாளும் உறுப்பினராக முடியாது என்று மிக காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் சசிகலா குறித்து விமர்சித்து பேசியதற்காக சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சி.வி.சண்முகம், ரோஷணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 7 ஆம் தேதி அரசியல் ரீதியாக சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துக்க்ளைத் தெரிவித்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், அடியாட்களை வைத்து, மொபைல் பேலான் மூலம் ஆபாசமாக பேசி, கொலை விடுத்து வருவதாக புகாரில் கூறியுள்ளார்.

மேலும், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர்களில் அநாகரிகமாக பதிவிட்டு வருகின்றனர் என்றும், இதுநாள் வரை 500 மொபைல் போன்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவேன் என மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். இதற்கு சசிகலாவின் தூண்டுதலே காரணம் என்றும், சசிகலா மீதும், என் மொபைல் போனில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சி.வி.சண்முகம் புகாரில் தெரிவித்துள்ளார். அவரது புகார் குறித்து, ரோஷனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
