ஒரு வருடத்திற்கு முன்பே மக்களுக்கு முகக்கவசம் போடுவது தெரியும்.,. முதல்வரை வம்புக்கிழுத்த செல்லூர் ராஜூ…
ஒரு வருடத்திற்கு முன்பே மக்களுக்கு முகக்கவசம் போடுவது தெரியும் என்றும், கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு, அத்துறையைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் கொரோனாவால் தற்போதும் அசாதாரண சூழ்நிலைதான் உள்ளது என்றார். தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வமாக இருந்தாலும், எப்போது தடுப்பூசி கிடைக்கும் என மக்களுக்கு தெரியவில்லை. மாவட்ட ஆட்சியருக்கும் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. மக்கள் தினம்தோறும் அலைந்து வருகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி குறித்த சரியான அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடவில்லை. இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கான தடுப்பூசியும் இல்லை என்றும் முதல் டோஸ் தடுப்பூசியும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் ஸ்டாலின், முகக்கவசம் எப்படி போடுவது என கூறுகிறார். ஒரு வருடத்திற்கு முன்பே முகக்கவசம் போட மக்களுக்கு தெரியும் என்றார்.
தமிழக அரசு தடுப்பூசிகளை அதிகமாக பெற வேண்டும் என்று கூறிய அவர், தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் தடுப்பூசி இல்லை என்று கூறப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். தடுப்பூசி பெற முதலமைச்சரும், அமைச்சர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லிக்கு போயிருக்கலாம். தடுப்பூசியைக் கேட்டு வாங்கியிருக்கலாம் என்றார்.
கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் இறப்புக்கான காரணம் இடம் பெறாது என அரசு மருத்துவமனைகளில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் கொடுப்பேன் என சொல்லிவிட்டு இறப்புக்கான காரணம் போடாவிட்டால் எப்படி பணத்தை மக்கள் பெற முடியும் என்று கேள்வி எழுப்பினார். ஐ. பெரியசாமிக்கு இன்னும் துறையைப் பற்றியே ஒன்றும் தெரியவில்லை. அவர் விருப்பம் இல்லாமல் அத்துறையில் உள்ளர். ஐ.பெரியசாமி மனவெறுப்பில் உள்ளார் என சிலர் கூறுவதாக செல்லூர் ராஜூ கூறினார்.
