தமிழ்நாடு

இளம் பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்…! 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது…

பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுவெளியேறிய இளம் பெண், ஒரு கும்பலிடம் சிக்கி வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எல்லீஸ் நகர் அவுசிங் போர்டு குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் குறிப்பிட்ட வீட்டுக்கு வந்த போலீசார், அங்கிருந்த 2 பெண்கள் உட்பட 5 பேரை அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது இளம் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு வருவது அம்பலமானது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு பெற்றோருடன் கோபித்துக் கொண்டு, மதுரை வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம், ஆதரவாக பேசிய சிலர், அவரை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளம் பெண்ணை மீட்ட போலீசார், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் நிலை இந்த கொரோனா காலகட்டத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பிழைப்பு தேடி வரும் பெண்கள், கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கி சீரழிந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.