ஒரு கண்ணில் வெண்ணெய்; ஒரு கண்ணில் சுண்ணாம்பா? அரசின் நடவடிக்கை நியாயமற்றது… ஜெயக்குமார் விளாசல்…
ஊராட்சி நுலகங்களில் முரசொலி, தினகரன், குங்குமம் மட்டும் வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்கத்தின் காணொளி காட்சியில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள நூலகங்களுக்கும் 3 நாளிதழ்கள் தவறாமல் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தினகரன் நாளிதழ் ஜூன் 2001 முதல் மே 2022 வரை வாங்குவதற்கான சந்தா தொகை 2128 ரூபாய் என தினகரன் பொது மேலாளர், (சேலம்) தெரிவித்தார். அதன் அடிப்படையில் நூலகங்களுக்கு தினசரி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் அதற்கான விபர அறிக்கையை அலுவலகத்திற்கு தவறாமல் அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அரசின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவினால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அனைத்து பத்திரிகைகளின் விற்பனையும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், முரசொலி, தினகரன், குங்குமம் மட்டும் நூலகங்கள் வாங்க அரசு துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பத்திரிகைகளையும் வாங்க உத்தரவிட வேண்டியதுதானே? என்றும் ஒரு கண்ணில் வெண்ணெய்யும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று அரசின் நடவடிக்கைகுறித்து ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், ஊராட்சி நூலகங்களுக்கு அனைத்து நாளிதழ்களையும் வாங்க வேண்டும் என்று நேற்றைய தினம் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். முரசொலி, தினகரன், குங்குமம், தமிழ் முரசு என திமுக ஆதரவு ஏடுகளை மட்டும் வாங்கவும், அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது நியாயமற்றது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
