Covid19

கோவாக்சினைவிட கோவிஷீல்டு சிறப்பாக செயல்படுகிறது… ஆய்வில் தகவல்…

இந்தியாவில் கொரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரம் தற்போது குறைந்து வரும் நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளபோதிலும், தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்புட்னிக் தடுப்பு மருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை கோபாக்சினைவிட கோவிஷீல்டே அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில், கோவாக்சினைவிட கோவிஷீல்டு கூடுதலான நோய் எதிர்ப்பு தன்மையை உருவாக்குவது தெரியவந்துள்ளது.

முன்கள பணியாளர்களுக்கே கொரோன தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போடப்பட்டன. அவர்களே ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக 13 மாநிலங்களைச் சேர்ந்த 515 சுகாதார பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 425 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 90 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது. இவர்களில் 95 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் டோஸ் மருந்து செலுத்தப்பட்ட நிலையில், 21 நாட்கள் முதல் 36 நாட்களுக்குப் பிறகு சிறந்த நோய் எதிர்ப்பு திறனை கோவிஷீல்டு உருவாக்கியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 98 சதவிகிதமாகவும், கோவாக்சின் தடுப்பூசி 80 சதவிகிதமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது எந்த தடுப்பூசி சிறப்பானது என்பதை தீர்மானிப்பதற்காக அல்ல என்றம், இரண்டு தடுப்பூசி செய்லபாடுகளின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மிதமான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும் உயிரிழப்புகள் குறைவதாகவும் டெல்லி எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.