மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்… பிரதமருக்கு முதல்வர் கடிதம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மருத்துவமனை கட்டுமானப்பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், கட்டுமானப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27.1.2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
