தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு… மளிகை-காய்கறி கடைகள் செயல்பட அனுமதி…
தமிழகத்தில், தளர்வுகளுடன் ஜூன் 14 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிப்பதா? வேண்டாமா? என்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், பூ விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு அறிமுகப்படுததியுள்ள நடமாடும் காய்கறி கடைகள், பழங்கள் விற்பனை செய்யும் திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ள நிலையில், அவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவிகித டோக்கன்கள் வழங்கப்பட்டு பத்திரபதிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மின் பணியாளர்கள், பிளம்பர்கள், இயந்திரங்கள் பழுதுநீக்குவோர் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனமதி வழங்கப்பட்டுள்ளது. எலக்ரிக் கடைகள், வாகன பழுதுபார்க்கும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகளும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாதளங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளதாகவும், அந்த பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
