இந்தியா

கொரோனா கோரத்தாண்டவம் : மத்திய பிரதேசத்தில் 3 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா!

மத்திய பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுடன் சேர்ந்து, மூத்த பயிற்சி மருத்துவர்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் குறித்து போபால் நகரில் உள்ள காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஹமிதியா மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர் சவுரப் திவாரி என்பவர் கூறியதாவது :

அரசு எங்களுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும்படி நாங்கள் கோரிக்கை விடுத்தோம். மாநிலத்தில் 3 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.மூத்த பயிற்சி மருத்துவர்களும் இன்று முதல் பணிநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் எங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் மத்திய பிரதேச சுகாதார அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது : பயிற்சி மருத்துவர்கள் எங்களிடம் பேச விரும்பவில்லை. இந்த போராட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஐகோர்ட்டு குறிப்பிட்டு உள்ளது.

நீதிமன்ற உத்தரவை அவர்கள் பின்பற்ற வேண்டும். உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவை அவர்கள் மதித்து, பின்பற்றுவார்கள் என நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.