கேரள முதல்வராக மே 20-ம் தேதி பதவியேற்கிறார் பினராயி விஜயன்
அண்மையில் கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் சி.பி.எம் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் எல்.டி.எஃப் கூட்டணியும், மீதமுள்ள 41 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியும் கைப்பற்றின.
கடந்த மே 2-ம் தேதியே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானாலும் அடுத்த அரசு இன்னும் பதவியேற்காமல் இருந்து வந்தது. குறிப்பாக பினராயி விஜயன் தான் அடுத்து முதல்வர் என்றாலும், கட்சிக் கூட்டம் தீர்மானிக்கும் வரை அவர் பதவியேற்க மாட்டார் என்று கூறப்பட்டது.
அதன்படி, திருவனந்தபுரத்தில் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். தேர்தலின்போது ஒதுங்கியிருந்த சிபிஎம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிரூஷ்ணன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கூட்டத்தின் மூலம் கட்சி நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த எல்.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், “மீண்டும் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் வரும் 20-ம் தேதி இதற்கான பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் தெரிவித்தார் .
