பாடநூல்களில் சாதியைக் குறிக்கும் சொற்கள் நீக்கம்…! பாராட்டும், ஆதரவும் தெரிவித்த டாக்டர் ராமதாஸ்…!
தமிழக பாடநூல்களில் சாதியைக் குறிக்கும் சொற்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. சாதி பெயர்கள் இன்றியே இனி தமிழறிஞர்களின் பெயர் இடம் பெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு பாட நூல் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் ஐ லியோனியின் நியமனத்திற்கு பலர் எதிர்ப்ப தெரிவித்து வந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் தலைவராக பொறுப்பேற்றவுடன் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வந்தது கடும் விமர்சனங்களை எழுப்பியது. இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் தலைவராக பொறுப்பேற்ற திண்டுக்கல் ஐ. லியோனி, பாடப்புத்தகங்களில் இனி ஒன்றிய அரசு என்றே இடம் பெறும் என அதிரடியாக அறிவித்தார். மேலும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளின் பாடப்புத்தகங்களும் தமிழில் அச்சிட்டு வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயரில் பின்னால் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் எனவும், உ.வெ.சாமிநாத அய்யர் என்பது உ.பே.சாமிநாதர் எனவும் மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் எனவும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் எனவும் மாற்றப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கப்பட்டே புத்தகங்கள் அச்சிடப்படும் எனவும் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் பாராட்டு தெரிவித்ததுடன், தங்கள் விமர்சனத்தையும் முன் வைத்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கதுதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அறிஞர்களின் அடையாளத்தைத்தான் அழிக்கும் என்று டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
