இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது… உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு வாதம்…
இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருச்சியில் உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்நதவர்கள்,இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும், குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பம் செய்யவும், அந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற கிளையில், மத்திய அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி, நீதிபதி சிவஞானம் அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது. திருச்சி அகதிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது. ஆகவே தமிழக அரசுக்கு இது குறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிடலாம் என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், தமிழக அரசின் முடிவாயினும் அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும், இது குறித்து தமிழக அரசு தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
