முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு… விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு…
திருமண மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வழக்கை ரத்து செய்ய முடியாது சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி, சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு, அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டு கூறப்படவில்லை என்று மனுவில் மணிகண்டன் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்பதை தெரிந்தே சம்மதத்துடன் உறவு கொண்டார் என்றும் இது பாலியல் வன்புணர்வு ஆகாது என்றம், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு முழுவதும் பொய் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, தன்னிடம் பணம் பறிக்க முயன்றபோது, அதற்கு இணங்காததால், நடிகை சாந்தினி தனக்கெதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்க அளிக்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணையை தடை விதிக்க வேண்டும் என்றும் மணிகண்டன் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கிற்கு தடை விதிக்க முடியாது என்றம், மனு தொடர்பாக பதிலளிக்க காவல் துறை மற்றும் நடிகை சாந்தினிக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 27 ஆம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.
