அரசியல்தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு துணை நிற்போம்: தமிழக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம் என்று தமிழக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டியே தீரும் என்று திட்டவட்டமாக கூறி வருகிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே அணையை கட்டக் கூடாது என்றும் தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மேகதாது அணை விவாகரத்தில் தமிழக அரசுக்கு பாஜக துணை நிற்கும் என்று அக்கட்சியின் துணை தலைவரான நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் விவகாரத்தில், தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ரத்து செய்தால் எதிர்க்கப்போவதில்லை என்றார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம் என்றும், இந்த திட்டத்தைக் கடுமையாக எதிர்ப்போம் என்றும் தமிழக மக்களின் நலனை ஒருபோதும் விட்டுததர மாட்டோம் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.